அரையிறுதியில் தோல்வி: ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் ஜோகோவிச்
களம் காண்கின்ற இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடும் ஜோகோவிச் ஒலிம்பிக் களத்தில் மட்டும் ஏனோ அதை செய்ய தடுமாறுகிறார்.
டென்னிஸ் விளையாட்டு உலகின் முதல் நிலை வீரர் ஜோகோவிச். செர்பியாவை சேர்ந்த 34 வயதான இவர் டென்னிஸ் விளையாட்டில் படைக்காத சாதனைகளே இல்லை. இருப்பினும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டுமென்பது அவரது பெருங்கனவு. டோக்கியோவில் அது கைகூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸெவரவிடம் தோல்வி அடைந்து அந்த வாய்ப்பை இழந்துள்ளார்.
இந்த போட்டியில் 6 - 1, 3 - 6, 1 - 6 என்ற வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார் ஜோகோவிச். இந்த ஆண்டு மட்டுமே ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் என கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக 2008 ஒலிம்பிக்கில் அவர் வெண்கலம் வென்றிருந்தார். அதை தவிர ஒலிம்பிக்கில் அவர் பெரிய அளவில் வேறு எந்த பதக்கமும் வென்றதில்லை. களம் காண்கின்ற இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடும் ஜோகோவிச் ஒலிம்பிக் களத்தில் மட்டும் ஏனோ அதை செய்ய தடுமாறுகிறார். நாளை வெண்கல பதக்கம் வெல்வதற்கான போட்டியில் ஸ்பெயின் வீரர் Pablo Carreño Busta உடன் அவர் விளையாட உள்ளார்.