வீடியோவின் நம்பகத்தன்மையை வெளிநாட்டில் சோதித்தால் நல்லது: திவாகரன் மகன் ஜெயானந்த்
வெற்றிவேல் வீடியோ வெளியிட்டது சரியானது தான் என்றும், அவரை யாரும் குறைக்கூற கூடாது என்று திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்தார்.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயானந்த், “ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் தான் மிகவும் மோசமான விமர்சனங்களை வைத்துள்ளார்கள். ஜெயலலிதா கொலை செய்யப்பட்டதாக பெயர், முகவரி இல்லமால் ஆர்.கே நகர் தொகுதி முழுக்க துண்டு பிரசுரங்கள் விநியோகித்துள்ளனர். அதைக் கண்டு தான் இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு வெற்றிவேல் தள்ளப்பட்டுள்ளார். இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் சோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும். ஏனெனில் இந்தியாவைப் பொறுத்த வரையில் மத்திய அரசு, மாநில அரசு என இரண்டு அரசுகள் தான் உள்ளது. அவற்றின் நம்பகத்தன்மையை பெறுவதை விட இந்தியாவிற்கு வெளியே வீடியோவை சோதித்தால் நன்றாக இருக்கும்.
சசிகலா ஒரு கட்சியினுடைய பொதுச்செயலாளர் என்பதால், ஒன்றரைக் கோடி தொண்டர்கள் நிம்மதியடைவார்கள் என்ற அடிப்படையில் இந்த வீடியோவை ஏற்றுக்கொள்வார். வெற்றிவேல் செய்த செயலையும் சசிகலா புரிந்து ஏற்றுக்கொள்வார். தேர்தல் கட்டுப்பாடுகள் அடிப்படையில் டிடிவி தினகரன் பேசமால் இருக்கிறார். அவர் பேசினால் அதன்மூலம் தேர்தலை நிறுத்த வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் முடிந்த பிறகு தினகரன் விளக்கமளிப்பார். வெற்றிவேல் வீடியோ வெளியிட்டது தினகரனுக்கோ, சசிகலாவிற்கோ தெரியாது. இருப்பினும் வெற்றிவேல் வீடியோ வெளியிட்டதன் நோக்கம் சரியானது. எனவே அதை யாரும் குறைக்கூறக் கூடாது. வீடியோ அழிந்துவிடலாம் என்ற அடிப்படையில் தான் சிலருக்கு வீடியோ பகிரப்பட்டது” என்று கூறினார்.