தனி அணியாக செயல்படுவதாகக் கூறியிருந்த திவாகரன், அம்மா அணி அலுவலகத்தை இன்று காலை தொடங்கியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரனுடனான மோதலைத் தொடர்ந்து தனி அணியாக செயல்படப் போவதாக கூறியுள்ள திவாகரன், தற்போது மன்னார்குடியில் அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார். அப்போது, அம்மா அணிக்கு மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர் என கூறினார்.
புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில், அம்மா அணி என்ற பெயரில் இயங்க உள்ளதாக திவாகரன் அறிவித்திருந்த நிலையில், இன்று புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். டிடிவி தினகரன் அம்மா அணியை கைவிட்டதால், தாம் புத்துயிர் அளிப்பதாக குறிப்பிட்ட திவாகரன், டிடிவி தினகரனை இயக்குவது அவரது மனைவி அனுராதா என்றும் குற்றஞ்சாட்டினார்.