நான் காலில் விழுந்தது உண்மைதான்... தினகரனும்தான் விழுந்தார்: திண்டுக்கல் சீனிவாசன்
சசிகலா காலில் தான் விழுந்தது உண்மைதான் எனவும், தினகரனும் தனது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் எனவும் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசனைப் பற்றி விமர்சித்திருந்த டிடிவி தினகரன், " சீனிவாசன் எங்கே இருக்கிறார் என தேடும் அளவிற்கு கடந்த 10 வருடங்களாக இருந்து வந்தார். அவர் தற்போது அமைச்சராகி இருக்கிறார். நாங்கள் கொடுத்த பொருளாளர் பதவியை வைத்துத்தான் செயல்பட்டு வருகிறார். எனவே பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னைப் பற்றி பேசட்டும்" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சீனிவாசன், "சசிகலா பொதுச் செயலாளர் இல்லை எனக் கூறி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினர் சேலஞ்ச் செய்துள்ளனர். எனவே வழக்கு முடிந்தவுடன் சசிகலா பொதுச் செயலாளர் இல்லை என சொன்னால் அவர் நியமித்த பொறுப்புகள் எல்லாம் அதுவாகவே காலவதியாகிவிடும். வழக்கு முடியட்டும் பார்க்கலாம்" என்றார்.
இதேபோல் டிடிவி தினகரன் " சசிகலா காலில் விழுந்த புகைப்படங்களையெல்லாம் நான் வெளியிட்டால் அவர்களுக்கு அசிங்கமாகிவிடும். நான் அவர்கள் தரத்திற்கு இறங்கி வரக்கூடாது. ஏதோ அமைச்சராக இருக்கிறார். வயதாகி விட்டது. இருக்கும் வரை பார்த்துவிட்டு போகலாம் என நினைக்கிறார் சீனிவாசன். பொருளாளர் பதவி கொடுத்தவுடன் என் காலிலும் விழ வந்தார். வயதில் மூத்தவர் காலில் விழ வேண்டாம் என நான் சொன்னேன். நாக்கு இப்படியும் பேசும். அப்படியும் பேசும்" என்றார்.
இதற்கு பதிலடியாக பேசிய சீனிவாசன் "சசிகலா பொதுச் செயலாளர் ஆன உடனேயே நான் கேட்காமலேயே பொருளாளர் பதவி கொடுத்தார்கள். அந்த நன்றி உணர்ச்சிக்கு காலில் விழுந்தது உண்மைதான். மரியாதை நிமித்தமாக அது நடந்தது. தவறில்லை. அதேபோல் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்ட உடனேயே என் காலிலும், செங்கோட்டையன் காலிலும் டிடிவி தினகரன் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இதுவும் உண்மைதான். அந்தப் படம் இருந்தாலும் வெளியிடட்டும். இதில் மறைப்பதற்கு எதுவுமே இல்லை" என்றார்.

