இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்போம்: திண்டுக்கல் சீனிவாசன்

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்போம்: திண்டுக்கல் சீனிவாசன்

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்போம்: திண்டுக்கல் சீனிவாசன்
Published on

மத்தியில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணக்கமாக இருந்ததால்தான் தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் வந்துள்ளன என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என கனவு கண்டு வருகிறார். அவரது கனவு எப்போதும் பலிக்கப் போவதில்லை. மதுரையில் ராஜகண்ணப்பன் திமுகவில் இணைந்ததை பெரிதாக ஸ்டாலின் பேசி வருகிறார். நாமெல்லாம் சைக்கிளில் டயர் தேய்ந்துவிட்டால் அதை மாற்றி விட்டு புதிய டயரை மாற்றி ஓட்டுவோம். ஆனால் பழைய டயரை வைத்து கட்சி நடத்துவதுதான் திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கம்.

தமிழக அமைச்சர்கள் பற்றி பொதுமக்களிடம் பேசும்போது ஆதாரத்துடன் ஸ்டாலின் பேச வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பாராளுமன்றத்தில் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் பலர் இறப்பதுபோல் தமிழகத்திலும் 100 பேர் சாக வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அப்போதுதான் முதலமைச்சராக முடியும் என்று போராட்டத்தில் ஈடுபட மக்களை தூண்டி விடுகிறார். தமிழகத்தில் என்ன பிரச்சனை நடந்து இருக்கிறது. டெல்லியில் நடந்துள்ளது மாதிரி தமிழகத்தில் கொடுமை நடந்துள்ளதா?

மத்தியில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணக்கமாக இருந்ததால்தான் தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் வந்துள்ளன. இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தாயின் மீது ஆணையாக நானும் அதிமுக கட்சியும் முதல் ஆளாக நின்று எதிர்ப்பு தெரிவிப்போம்.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரித்து வாக்களித்துள்ளனர் எல்லோரும் எடுக்கும் முடிவுக்கு நாங்களும் தலை வணங்குகிறோம். அதேபோல் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, உள்ளாட்சி தேர்தலுக்குள் குறைகளை நீக்கினால் அதிமுகவை ஆட்டவோ அசைக்கவோ எந்த கொம்பனாலும் முடியாது.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தவறு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்துச் சொன்னது தமிழக அரசுதான், அதை மறைக்க வேண்டும் என்றால் எங்களுக்கு மறக்கத் தெரியாதா? மு.க ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்ற தகுதியைத் தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது” எனப் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com