தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் போலீஸார் விசாரணை
கர்நாடகாவில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் தமிழக போலீஸார் விசாரணை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர். இந்த விடுதிக்கு சாதாரண உடையில், வாடகை வாகனத்தில் வந்த தமிழக போலீஸார், விடுதிக்குள்ளே செல்லும் போது சீருடைக்கு மாறினர். பின்னர், விடுதிக்குள் சென்ற அவர்கள், அங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. விசாரணையின் போது உங்களை யாரேனும் கட்டாயப்படுத்தி தங்கவைத்துள்ளார்களா, உங்களுக்கு எங்களுடன் தமிழகம் வர விருப்பமா என்று கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுகுறித்து கூறும் அரூர் எம்.எல்.ஏ முருகன், போலீஸார் வந்தது எம்.எல்.ஏ பழனியப்பன் மீதான மோசடி புகார் குறித்து அவரிடம் விசாரணை நடத்ததான் என்றும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையோடு இருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் பழனியப்பன் தற்போது விடுதியில் இல்லை என்பதால் போலீஸார் திரும்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு தமிழக போலீஸார் வந்து சென்றது தொடர்பாக, கர்நாடக போலீஸாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.