தோனி Vs ரோகித்: ஐபிஎல் வரலாற்றில் சாதனைகள் என்ன ?
அதிரிபுதிரியாக அபுதாபியில் இன்று தொடங்குகிறது 13 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர். கொரோனா பாதிப்பு காரணமாக கோலாகல தொடக்க விழாக்கள், மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் இந்தாண்டு ஐபிஎல் தொடங்குகிறது. ஆனால் முதல் போட்டியே மும்பை - சென்னை என்பதால் ரசிகர்கள் சரவெடி பட்டாசாக காத்திருக்கின்றனர். மும்பையா சென்னையா என்று ஒரு பக்கம் காத்திருந்தாலும் மற்றொரு பக்கம் தோனியா ரோகித்தா என்று ரசிகர் பட்டாளம் காத்திருக்கிறது.
இப்போது ஐபிஎல் வரலாற்றில் இந்த இரு கேப்டன்களின் சாதனைகள் என்னவென்று சற்று தெரிந்துக்கொள்ளலாம். சிஎஸ்கேவை பொறுத்தவரை 2008 முதல் இப்போதுவரை தோனிதான் கேப்டன் அவர்தான் எல்லாமும். அவர் தலைமையில் 2010,2011,2018 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது. இதேபோல ரசிகர்களால் அன்புடன் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 2013, 2015, 2017, 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றி சாதனைப் படைத்தது.
ஒரு பேட்ஸ்மேனாக தோனி !
சிஎஸ்கேவுக்காக 190 போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி மொத்தம் 4432 ரன்களை எடுத்துள்ளார். அதில் 23 அரை சதம் அடங்கும். அவரின் ஐபிஎல் பேட்டிங் சராசரி 42.20. இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் 200 போட்டிகளில் விளையாடிய பெருமையை தோனி பெறுவார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தோனி 7 ஆவது இடத்தில் இருக்கிறார்.
பேட்டிங் அசுரனாக ரோகித் !
ரோகித் சர்மா இதுவரை 188 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 4898 ரன்களை குவித்துள்ளார். அதில் ஒரு சதம், 35 அரை சதமும் அடங்கும். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் விராட் கோலியும், இரண்டாவது இடத்தில் சுரேஷ் ரெய்னாவும் இருக்கின்றனர், ஸ்டிரைக் ரேட்டை பொறுத்தவரை தோனியை விட குறைவாகவே இருக்கிறார் ரோகித் சர்மா.
கேப்டனாக "தல" தோனி பெற்ற வெற்றிகள்
சென்னை அணிக்கு 174 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள தோனி மொத்தம் 104 வெற்றிகளையும், 69 தோல்விகளையும், ஒரு போட்டி வெற்றி தோல்வி இல்லாமல் முடிவடைந்துள்ளது. தோனி தலைமையிலான சென்னையின் வெற்றி சதவிதம் 59.77.
கேப்டனாக ஹிட்மேன் ரோகித் சர்மாவின் "ரெக்கார்டு"
மும்பை அணிக்காக 104 போட்டிகளில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 62 வெற்றிகளையும் 42 தோல்விகளையும் கண்டுள்ளார். இவர் தலைமையிலான மும்பையின் வெற்றி சதவிதம் 59.62.