விமர்சனங்களுக்கு விளாசலில் விடையளிப்பாரா தோனி?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரு போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், மகேந்திர சிங் தோனி மீது பல்வேறு விமர்சனங்கள் அணி வகுக்க தொடங்கிவிட்டன.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலம் கிட்டத்தட்ட 430 நாட்களுக்குப் பிறகு விளையாட்டு களத்திற்கு திரும்பினார் மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் சீசனில் இருந்தே சென்னை அணிக்கு அவர் தான் ஆணி வேர். ஆனால் நடப்பு சீசனில் என்னவோ அவர் மேல்வரிசையில் களமிறங்க தயக்கம் காட்டி வருகிறார்.
மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் யாரும் எதிர்பாராத இடத்தில் அணியின் அறிமுக வீரர் சாம்கரணை களமிறக்கிவிட்டார் தோனி. அப்போட்டி வெற்றி முகத்தில் முடியவே, அனைவரும் தோனியின் வியூகத்தை மெச்சி பாராட்டு மழையில் நனைய வைத்தனர். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இமாலய இலக்கை துரத்திய போதும் இளம் வீரர்களையே மேல்வரிசையில் களமிறக்கினார் தோனி. ஆனால் இம்முறை எதிரணியினருக்கு வெற்றி கைகூடியது. விமர்சனங்களும் வரிசை கட்ட தொடங்கின.
இளம் வீரர்களை இக்கட்டான சூழலில் தோனி களமிறக்கியது அர்த்தமற்றது என கடுமையாக விமர்சித்தார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். முன் நின்று வழிநடத்த வேண்டியவர் காலம் கடந்து களமிறங்கி அதிரடி காட்டுவதில் என்ன பலன் எனவும் அவர் சாடினார். ஆட்டம் கைவிட்டு போன பின்பு இறுதி ஓவரில் அதிரடி காட்டிய தோனி, ரன் ரேட் உச்சம் பெறத்தொடங்கிய போதே அதற்கான முனைப்பைக் காட்டவில்லை என விமர்சித்தார் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்.
சுனில் கவாஸ்கர் மற்றும் கெவின் பீட்டர்சனும் தோனி கீழ் மத்திய வரிசையில் இறங்கியதை விமர்சனமே செய்துள்ளனர். 9 ஓவர்களில் 3 விக்கெட்டு இழப்பிற்கு 77 ரன்கள் என்ற ஒரு நல்ல அடித்தளத்தில், தோனி பின்வாங்கியது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினர்.
ஆனால் அந்தப் போட்டிக்குப் பின் பேட்டியளித்த தோனி, சென்னை அணிக்கு கொரோனா தனிமைப்படுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டதன் காரணமாக தன்னால் போதிய அளவு பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளவில்லை என வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீஃபன் பிளம்மிங்கும் தோனிக்கு ஆதரவாகவே பேசியுள்ளார்.
எப்போதும் விமர்சனங்களுக்கு விளாசல்கள் மூலம் விடையளிக்கும் தோனி நடப்பு சீசனிலும் விரைவில் பழைய ஃபார்முக்கு வந்து விருந்தளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.