பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் திட்டவட்டம்
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பின்னர் நாளைய கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என மீண்டும் திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்துவிட்டனர்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நாளை நடத்துகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அதன்படி, நாளைய கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் திட்டவட்மாக அறிவித்துள்ளனர். யாருக்கும் முறையான அழைப்புவிடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். மூன்று பேர் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அவர்கள் அனைவரும் புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.