தினகரன், நடிகர் செந்திலை கைது செய்ய அக். 4 வரை தடை
டிடிவி தினகரன், நடிகர் செந்திலை கைது செய்ய அக்டோபர் 4-ம் தேதி வரை தடைவிதித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டிடிவி தினகரன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து பலரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில், அ.தி.மு.க அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திராவை நீக்கிவிட்டு, அந்த பொறுப்பில் செந்திலை நியமனம் செய்தார். அதேபோல், இளைஞர்கள் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து அதிமுக எம்பி, ப.குமார் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து, தனியார் தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்த போது ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் நடிகர் செந்தில் பேசியதாக எம்.பி. ப.குமார், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். தினகரன் தூண்டுதலால் செந்தில் பேசியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் தினகரன், நடிகர் செந்தில் ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிராக தினகரன் தலைமையில் திருச்சியில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ப.குமார் புகார் தொடர்பாக தினகரன், நடிகர் செந்தில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. இதனையடுத்து, கைது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் செந்தில் மனு தாக்கல் செய்தார்.
நடிகர் செந்தில் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி சுந்தர், டிடிவி தினகரன், நடிகர் செந்திலை கைது செய்ய அக்டோபர் 4-ம் தேதி வரை தடைவிதித்தார். அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.