இன்னொரு யுவராஜ் சிங்கா? யார் இந்த ‘தேவ்தத் படிக்கல்’
ஐபிஎல் தொடர் என்றாலே அதிரடிக்கு சற்றும் பஞ்சமே இருக்காது. அதுவும் அறிமுக, இளம் வீரர்கள் பலரும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச போட்டிக்கான பாதையை அமைத்துவிடுவார்கள். அப்படித்தான் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரும்; இந்திய அணிக்காக யுவராஜ் சிங்கை போன்ற ஒரு இடது கை வீரர் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் 20 வயதே ஆன தேவ்தத் படிக்கல்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு அதிரடி தொடக்கத்தை கொடுத்து அசத்தியுள்ளார் படிக்கல்.
கோலி படையின் புதிய படைவீரனாக இணைந்துள்ள படிக்கல் நேற்று தனது முதல் ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடினார். கர்நாடக பிரிமியர் லீக் தொடரில் அதிரடியாக விளையாடிய இடது கை பேட்ஸ்மேனான படிக்கல், அதன் மூலமே தனக்கான ஐபிஎல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டார்.
‘நான் இரண்டாவதாக கருவுற்றிருந்த சமயம் அது. பிறப்பது ஆண் பிள்ளையாக இருந்தால் அவனை கிரிக்கெட் பிளேயராக ஆளாக்க விரும்பினேன்’ என ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார் படிக்கல்லின் அம்மா அம்பில் படிக்கல். தன் அம்மாவின் ஆசைக்காக கிரிக்கெட் பிளேயராகவே வளர்ந்தார் படிக்கல்.பாட்ஷா படத்தில் சொல்வது போல ரத்தம், சதை, புத்தி என அனைத்திலும் படிக்கலுக்கு கிரிக்கெட் வெறி ஊறி போயுள்ளது என்றே அவரது இதுவரையிலான ஆட்டங்கள் காட்டுகிறது.
2014இல் கர்நாடகா கிரிக்கெட் இன்ஸ்டிட்யூட்டில் புரொபஷ்னல் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கினார் படிக்கல். பதினாறு வயதில் கர்நாடக அணிக்காக அண்டர்-16 மேட்ச்களில் விளையாட ஆரம்பித்தார். பதினேழு வயதில் கர்நாடக பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக பெல்லாரி டஸ்கர்ஸ் அணிக்காக 53 பந்துகளில் 72 ரன்களை குவித்து லைம்லைட்டுக்குள் வந்தார் படிக்கல். அதன் மூலம் 2018 ரஞ்சி கோப்பை சீசனில் அறிமுகமானார்.
தொடர்ந்து 2019 - 20 விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடி 609 ரன்களை குவித்து லீடிங் ரன் ஸ்கோரராக ஜொலித்தார். அவரது ஆட்டத்தின் மூலம் கர்நாடகாவை அந்த தொடரில் இறுதி போட்டி வரை முன்னேற செய்தார். தொடர்ந்து 2019 ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
‘அவன் 2019 சீசனில் ஆடியிருந்தால் அவனது முதல் போட்டியை நேரில் பார்த்திருப்பேன். இம்முறை கொரோனாவினால் அதை பார்க்கமுடியாமல் போனது’ என வருத்தமாக சொல்கிறார் படிக்கலின் அம்மா. 2019 சீசன் முழுவதும் பெஞ்சில உட்கார வைக்கப்பட்ட படிக்கல் நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆடும் வாய்ப்பை கொடுத்தார் கேப்டன் கோலி.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் கெய்ல் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்ப முயன்ற பெங்களூரு அணி பல வீரர்களை சோதித்து பார்த்தது. ஆனால் அதற்கு யாருமே சரிப்பட்டு வராத நிலையில் ‘நான் இருக்கேன் கேப்டன்’ என கோலிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார் படிக்கல். ‘அவன் ஆட்டத்தை பார்ப்பவர்கள் அசந்து நிற்பார்கள்’ என ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் சொல்லியிருந்தார் படிக்கலின் கோச் முகமது நஸீருதீன்.
அட்டாக்கிங் பேட்ஸ்ட்மேனான படிக்கல் பர்ஸ்ட் கிளாஸ் மேட்ச்களில் 907 ரன்களையும், லிஸ்ட் A போட்டிகளில் 650 ரன்களும், டி20 போட்டிகளில் 580 ரன்களையும் குவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனர் பின்ச்சோடு பெங்களூருவுக்காக ஓப்பனிங் ஆடி 42 பந்துகளில் 56 ரன்களை குவித்து விஜய் ஷங்கரின் பந்தில் போல்டானார். முதல் ஆட்டத்தில் பந்தை தூக்கி அடிக்காமல் கிளாசிக்காக டிரைவ் ஆடி 8 பவுண்டரிகளை அடித்திருந்தார்.
ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்னதாக கடந்த 2016இல் முதல் போட்டியில் அரை சதம் அடித்திருந்தார் சாம் பில்லிங்ஸ். இந்தியா சார்பில் உள்நாட்டு வீரர்கள் கடந்த 2010இல் கேதார் ஜாதவ் அரை சதம் அடித்திருந்தார். ஆர்.சி.பி அணிக்காக இதற்கு முன்னதாக கடந்த 2008இல் ஸ்ரீவத் கோஸ்வாமி அரை சதம் அடித்திருந்தார்.இந்த சீசன் ஆரம்பமாவதற்கு முன்னரே எமர்ஜிங் பிளேயர்கள் பட்டியலில் படிக்கலும் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர் கிரிக்கெட் விமர்சகர்கள். அதை முதல் ஆட்டத்திலேயே நிரூபித்தும் காட்டிவிட்டார் படிக்கல்.