எத்தனை அண்ணாமலை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது - தேவசகாயம்

எத்தனை அண்ணாமலை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது - தேவசகாயம்
எத்தனை அண்ணாமலை வந்தாலும்  தமிழகத்தில்  பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது - தேவசகாயம்

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பா.ஜ.கவில் இணைந்தது குறித்து,  முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்திடம் கேட்டோம்,

             “அண்ணாமலை அரசியலுக்கு வரட்டும். வராமல் போகட்டும். அது பிரச்சனை இல்லை. யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். அது ஜனநாயக உரிமை. ஆனால், இவர் 9 வருடம்தான் ஐ.பி.எஸ் பணியில் இருந்துள்ளார்.  அரசியலுக்கு வருவதற்கு அதற்குள் என்ன அவசரம்? மக்கள் சேவையை எந்தத் துறையில் இருந்தாலும் செய்யலாம். ஐ.பி.எஸ் பணியை விட்டுவிட்டுத்தான் அரசியலுக்கு வந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்பதில்லை. இவர், எதற்காக அரசியலுக்கு வந்தார் என்பது மர்மமாக இருக்கிறது. முதலில் ரஜினிகாந்திடம் சென்றார். அவர் கட்சி ஆரம்பிக்க தாமதமானதும் பாஜகவில் இணைந்துள்ளார். இவருக்கு கர்நாடகாவில் பணிபுரியும்போதே ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அதைப்பயன்படுத்திதான் பாஜகவில் இணைந்துள்ளார் என்றே நினைக்கிறேன்.

          பாஜக அரசுகளில் பணிபுரியப் பிடிக்காமல்  கடந்த வருடம் மட்டுமே மூன்று ஐ.ஏ.எஸ்கள் ராஜினாமா செய்தார்கள். அதில், நம் தமிழர் சசிகாந்த் செந்திலும் ஒருவர். கேரளாவை சேர்ந்த கண்ணன் கோபிநாதனும் ஒருவர். மற்றொருவர் காஷ்மீரைச் சேர்ந்தவர். ராஜினாமா செய்துவிட்டு, இந்த மூவரும் அரசியலுக்குச் செல்லவில்லை. மக்கள் சேவையை களத்தில் இருந்து தனி மனிதர்களாகத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த மக்கள் விரோத திட்டம் என்றாலும் அதனை செயல்படுத்துபவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான். மூவருமே பாஜக  அரசுக்கு எதிராக வேலையை விட்டவர்கள். அப்படியொரு கட்சியில் எப்படி இவர் சேர்ந்தார்? என்ன காரணத்திற்காக சேர்ந்தார்?

அரசியலுக்கு சென்றுதான் மக்கள் சேவை செயய்வேண்டும் என்றில்லை. பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து காவல்துறை அராஜகம் அதிகரித்துவிட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான் குளம் சம்பவமே இதற்கு உதாரணம். அப்படியிருக்கும்போது, பாஜக காவல்துறை அதிகாரியை ஏன் அரசியலுக்கு கொண்டு வருகிறது? அந்தக் கேள்வியைத்தான் நான் எழுப்புகிறேன். பாசிசக் கொள்கையை வளர்க்கவே இவரை அரசியலுக்கு வரவைத்துள்ளது. அரசுப் பணியில் இருந்து வருபவர்கள் மக்களுக்கு சேவை செய்ய உண்மையான எண்ணத்தோடு கொள்கைக்காக அரசியலுக்கு வரவேண்டுமே தவிர அரசியல் கட்சிகளுடன் கைகோர்க்ககூடாது.

அண்ணாமலை அரசியலில் சேர்ந்துதான் சேவை செய்வேன் என்பது கண்டிக்கத்தக்கது. அண்ணாமலைக்கு தமிழகத்தில் வரவேற்பு நிச்சயம் கிடைக்காது. யார் மக்களுக்கு எதிரானவர்கள் என்பது நன்கு புரிந்தவர்கள் தமிழர்கள். ஆர்.எஸ்.எஸ்தான் அண்ணாமலையை ராஜினாமா செய்ய வைத்துள்ளது. பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ, ஒரு எம்.பி தமிழகத்தில் கிடையாது. அதனால்,அண்ணாமலையை இறக்கியுள்ளார்கள். ஆனால், எத்தனை அண்ணாமலை வந்தாலும்  தமிழகத்தில்  பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com