பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பிறகும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பிரபலமாக இருந்து வருகிறார் என்று பியூ ரிசர்ச் சென்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின்னர் பணம் கிடைக்காமல் மக்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானார்கள். குறுகிய காலம் கஷ்டத்தை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். அப்படி பொறுத்துக் கொண்டால் பெரிய அளவில் பலன் கிடைக்கும் என்றார்.
ஆனால் இந்த நடவடிக்கையால் நாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோல் ஜிஎஸ்ட் நடவடிக்கையும் திட்டமிடப்படாமல் தொடங்கப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். அதேபோல் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிக அளவில் நிலவுவதாகவும், கருத்து சுதந்திரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜகவைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட மூத்த தலைவர்களே மோடியின் செயல்பாடுகளை தற்போது விமர்சித்து வருகின்றனர். இதனால் மோடி என்ற பிம்பம் உடைய தொடங்கி விட்டதாக பேசப்பட்டது.
ஆனால், மோடியின் பிரபலம் இன்னும் குறையவில்லை என்று கருத்துக் கணிப்பு ஒன்று கூறுகிறது. அமெரிக்காவில் உள்ள பியூ ரிசர்ச் சென்டர் பிப்ரவரி 21 முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், மோடியின் செல்வாக்கு மற்ற தலைவர்களைவிட மிகவும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி 88 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், ராகுல் காந்தி 57 சதவிகிதத்துடனும், சோனியா காந்தி 58 சதவிகிதத்துடனும், கெஜ்ரிவால் 39 சதவிகிதத்துடன் பிரபலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து நபர்களில் ஒன்பது பேர் மோடி குறித்து சாதகமான கருத்தையே கொண்டுள்ளனர் என்கிறது கருத்துக் கணிப்பு. அதேபோல் பத்து நபர்களில் ஏழு பேர் பிரதமராக மோடியின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது என்ற கருத்தை கொண்டுள்ளனர். மோடியின் பிரபலம் 2016-ம் ஆண்டு சற்று குறைந்தாலும், இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவை விட காங்கிரஸ் கட்சி சற்றே மவுசு குறைந்து காணப்படுகிறது என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.