ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற நிதி ஒதுக்கீடு
ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அதற்கு முன்னதாக அவர் சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் தான் வசித்து வந்தார். இவ்வீடு ஜெயலலிதா சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோதே கட்டப்பட்ட வீடாகும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவர் வசித்து வந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அதிகாரிகளும் வேதா நிலையத்தில் பல முறை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகளுக்கு மொத்தமாக 20 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.