கோவா தேர்தல்: சீட் மறுக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பர்சேகர் பாஜகவிலிருந்து விலகல்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சியால் சீட் மறுக்கப்பட்ட கோவா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான லக்ஷ்மிகாந்த் பர்சேகர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
லக்ஷ்மிகாந்த் பர்சேகர் தற்போது கோவா பாஜக தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவராகவும், கட்சியின் மையக் குழு உறுப்பினராகவும் உள்ளார். 2002 முதல் 2017 பர்சேகர் வெற்றி பெற்ற மாண்ட்ரேம் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ தயானந்த் சோப்டேவை பாஜக அறிவித்துள்ளது . சோப்டே 2017 கோவா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இருந்து பர்சேகரை தோற்கடித்தார், ஆனால் 2019 இல் அவர் பாஜகவில் இணைந்தார்.
ராஜினாமா முடிவு குறித்து அறிவித்துள்ள பர்சேகர், “இப்போது நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பின்னர் முடிவு செய்வேன். சோப்டே மாண்ட்ரேமில் உள்ள உண்மையான பாஜக தொண்டர்களை புறக்கணித்து வருகிறார், இதனால் அவர்களிடையே பெரிய அளவில் அதிருப்தி நிலவுகிறது” என்று கூறினார்.
கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சரான பிறகு, பர்சேகர் 2014 முதல் 2017 ஆம் ஆண்டுவரை கோவாவின் முதல்வராக இருந்தார்.
பிப்ரவரி 14-ம் தேதி கோவாவில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 34 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது, மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன.