மே.வங்கத்தில் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் இறங்கிய டெல்லி போராட்ட விவசாயிகள்

மே.வங்கத்தில் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் இறங்கிய டெல்லி போராட்ட விவசாயிகள்
மே.வங்கத்தில் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் இறங்கிய டெல்லி போராட்ட விவசாயிகள்

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள், மேற்கு வங்கம் சென்று அங்கு பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளைத் தொடங்கியுள்ளனர். 

எந்தப் பாதிப்பும் இருக்காது என்ற நம்பிக்கையுடன் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகர் டெல்லியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ளது. இவர்கள், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்வோம் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி ஒரு குழு மேற்குவங்கத்திற்கு விரைந்து தங்களின் பரப்புரையைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் விவசாயிகள் அதிகம் இருக்கக்கூடிய கிராமப்புறங்களில் விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்ற முழக்கத்துடன் பேரணி நடத்தி வருகின்றனர்.

கிரித்தி கிசான் யூனியன், யோகேந்திர யாதவின் ஸ்வராஜ் இந்தியா, சன் யுக்த் கிசான் மோர்ச்சா உள்ளிட்ட ஏராளமான விவசாய சங்கங்கள் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. மகாபஞ்சாயத்து என்று அழைக்கப்படும் விவசாயிகள் அடங்கிய கிராமப்புற பஞ்சாயத்துக்களில் இவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இவை தவிர வரும் மார்ச் 26 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் இந்த முழு அடைப்பை செயல்படுத்தவும் விவசாய சங்கங்கள் வியூகம் வகுத்துள்ளன.

எனவே இது பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்ததற்கு விவசாயிகளின் போராட்டம் முக்கிய காரணமாக இருந்தது. அதேபோன்ற தாக்கம் மேற்கு வங்கத்திலும் இருக்கும் என விவசாய சங்கங்கள் கூறுகின்றன. ஆனால் விவசாய சங்கங்களின் இந்த பரப்புரைகளால் மேற்குவங்க தேர்தலில் தங்களுக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது என நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பாரதிய ஜனதா கட்சியினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com