லக்னோ அணியின் மோசின்கான் அபார பந்துவீச்சு! கடைசி ஓவரில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட டெல்லி!

லக்னோ அணியின் மோசின்கான் அபார பந்துவீச்சு! கடைசி ஓவரில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட டெல்லி!
லக்னோ அணியின் மோசின்கான் அபார பந்துவீச்சு! கடைசி ஓவரில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட டெல்லி!

லக்னோவிற்கு எதிரான போட்டியில் 196 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி பேட்ஸ்மேன்கள் அவசர கதியில் விளையாடியதால் கடைசி ஓவரில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டனர். அபாரமாக பந்துவீசிய மோசின் கான் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

ஐ.பி.எல். தொடரின் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணி தரப்பில் குயிண்டன் டி காக்கும் கே.எல். ராகுலும் களமிறங்கினர். அதிரடி காட்டி சிக்ஸர், பவுண்டரிகளாக டி காக் ஒருபக்கம் விளாச, மறுபக்கம் ராகுலும் தன் பங்குக்கு பந்துகளை எல்லைக்கோட்டுக்கு பறக்கவிட்டார். ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் சிக்கி டிகாக் 23 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்ததாக வந்த தீபக் ஹூடா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினார். கே.எல். ராகுலும் அருமையாக விளையாடியதால் ஸ்கோர் விறுவிறுவென உயரத் துவங்கியது. அபாரமாக விளையாடிய இருவரும் ரன் ரேட் 9க்கு குறையாத படி பார்த்துக் கொண்டனர். பொறுப்பாக விளையாடிய ராகுல் 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுபக்கம் தீபக் ஹூடாவும் 32 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதன்பின் ஷர்துல் பந்துவீச்சில் சிக்கி ஹூடா அவுட்டாக, அடுத்து ஸ்டாய்னிஸ் களமிறங்கி அதிரடியாக ஆடத் துவங்கினார்.

அடுத்து ஷர்துல் வீசிய ஓவரில் ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை லலித் யாதவ் சரியாக பிடித்தார். இறுதி ஓவர்களில் களமிறங்கிய க்ருனால் பாண்டியா, ஸ்டாய்னிஸ் உடன் இணைந்து அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். தற்போது 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கியது டெல்லி அணி. அந்த அணியில் ஓப்பனர்களாக பிருத்வி ஷா, வார்னர் களமிறங்கினர்.

சமீரா வீசிய 2வது ஓவரில் முதல் பவுண்டரியை விளாசிய பிருத்வி ஷா,அதற்கடுத்த பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ்க்கு வார்னர் துணை நிற்பார் என எதிர்பார்த்த நிலையில் 3வது ஓவரில் வெறும் 3 ரன்களில் நடையை கட்டி அதிர்ச்சி அளித்தார். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் ஓப்பனர்கள் 13 ரன்களுக்குள் பெவிலியன் திரும்பினர்.

அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட், மார்ஷ்-உடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். க்ருனால் பாண்ட்யா வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி அதகளம் செய்தார் பண்ட். ஹோல்டர் வீசிய ஓவரில் மார்ஷ் சிக்ஸர், பவுண்டரி விளாச ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயரத் துவங்கியது. ரன் ரேட்டும் 9க்கு குறையாமல் பயணித்த நிலையில் கவுதம் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேற டெல்லி அணி தள்ளாடத் துவங்கியது.

லலித் யாதவ் வந்த வேகத்தில் பிஷ்னாய் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அவர் வீசிய அடுத்த ஓவரில் பண்ட் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை கேப்டன் ராகுல் தவற விட்டார். கவுதம் வீசிய ஓவரில் பாவெல் சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட டெல்லி அணி மீண்டும் வெற்றியை நோக்கி திரும்பியது. ஆனால் பண்ட் மோசின் கான் ஓவரில் க்ளீன் போல்டாகி வெளியேற, அந்த அணியின் வெற்றி வாய்ப்பு மங்கத் துவங்கியது.

அடுத்து வந்த அக்சர் படேலும் அதிரடியாக விளையாடினார். ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த பாவெல், மோசின் கான் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ஷர்துல் தாகூர் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, கடைசி இரு ஓவர்களில் டெல்லி அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. அக்சர் படேல் அதிரடியாவ ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாச, கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் பந்தில் குல்தீப் யாதவ் சிக்ஸர் விளாச, 2வது பந்தில் ஒரு “வைடு”உடன் ஒரு ரன் கிடைத்தது. ஆனால் 3 மற்றும் 4 வது பந்தில் ஸ்டாய்னிஸ் அட்டகாசமாக யார்க்கர்களை இறக்க அக்சர் படேலால் ரன் எதுவும் எடுக்க இயலவில்லை. 5வது பந்திலும் ரன் எடுக்காகதால் டெல்லியின் தோல்வி உறுதியானது. இறுதிப்பந்தில் அக்சர் ஒரு சிக்ஸரை விளாச, 6 ரன்கள் வித்தியாசத்தில் “த்ரில்” வெற்றியை ருசித்தது லக்னோ அணி. இதன் மூலம் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியது. அபாரமாக பந்துவீசிய மோசின் கான் 16 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com