பார்ட் டைம் அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்குங்கள்: மு.க.ஸ்டாலின்
டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடு்க்காத சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்கு பாதிப்பு தமிழகத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் டெல்லியில் அளித்த பேட்டியை குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இதன் மூலம் டெங்கு கட்டுக்குள் இருக்கிறது; மக்கள் பீதியடையத் தேவையில்லை என சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது பொய் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெங்குவின் தாக்கம் அதிகம் இருப்பதாகவும், 13 மாவட்டங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக எச்சரித்தும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உரிய கவனம் செலுத்தவில்லை என்று ஸ்டாலின் குறை கூறியுள்ளார்.
மத்திய மாநில அரசுகளுக்கு ஏறக்குறைய 495 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக வருமான வரித்துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜயபாஸ்கரை நீட் தேர்வு குறித்து பேச, முதலமைச்சர் டெல்லிக்கு அனுப்புவது குறித்தும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான பதில் எதுவும் இதுவரை கிடைக்காத நிலையில் விஜயபாஸ்கர் தனது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்தாரா என சந்தேகம் எழுவதாகவும் ஸ்டாலின்குறிப்பிட்டுள்ளார்.
டெங்குவால் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விஜயபாஸ்கர் பார்ட் டைம் அமைச்சர் போல் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எனவே சுகாதாரத் துறைக்கு முழு நேர அமைச்சர் ஒருவரை நியமிப்பதோடு, டெங்கு பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை முதல்வரே முன்னின்று கவனிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்