தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவு: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மருத்துவ ஆணையம் தொடர்பான சட்டமுன்வடிவில் கூறப்பட்டுள்ள அனைத்தும் மத்திய அரசின் எதேச்சதிகாரத்திற்கு வழிகோலுவதாக சாடியுள்ளார். கூட்டாட்சித் தத்துவத்திற்கும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் எதிராக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வர முயற்சிப்பதை அனைத்து மாநிலங்களும் முழுமூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக மருத்துவக் கல்வி தொடர்பான பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் நோக்கத்தில், இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக, இந்த ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது. மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மருத்துவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.