30 வருஷம் முன் இறந்தவர்களுக்கு கல்யாணம்: இந்தியாவின் விசித்திரமான கலாசாரம் எங்கு தெரியுமா?
இந்தியா பன்முகத்தன்மைக் கொண்ட நாடாக இருந்தாலும், இங்கு எந்த மாநிலத்தில் உள்ள நகர்ப்புறங்களிலோ, கிராமப்புறங்களிலோ எந்த மாதிரியான கலாசார, பண்பாடுகள் பின்பற்றப்படுகிறது என்பதை 138 கோடி மக்களுக்கும் தெரிந்திருக்காது.
ஆனால் சமூக வலைதளங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறது என்பதை கர்நாடகாவின் தட்சின கன்னடாவில் நடைபெறும் விசித்திரமான திருமண கலாசாரம் குறித்த நிகழ்வு, ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.
திருமண சடங்குகளில் என்ன புதுமை இருந்திடப் போகிறது என உங்களுக்கு கேள்வி எழலாம். ஆனால் அதில்தான் பெரிய ட்விஸ்டே இருக்கிறது. ஏனெனில் தட்சின கன்னடாவில் நடந்த அந்த திருமணத்திற்கான மணமக்கள் இருவரும் 30 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்களாம். கேட்கவே அதிர்ச்சியாகவும் திகிலாகவும் இருக்கிறதா?
இது பாரம்பரியமான சடங்காகவே தட்சின கன்னடாவில் பல காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 28ம் தேதியன்று நடந்த இந்த திருமணத்தின் மணமக்கள் இருவரும் 30 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையாக இருந்தபோதே இறந்தவர்களாம்.
திருமணமே ஆகாமல் ஒருவர் இறந்துவிட்டால் அவர்களது ஆன்மா இந்த புவியில் அலைந்துக் கொண்டேதான் இருக்கும், அதனால் குடும்பத்திலும் பிரச்னைகள் எதிர்கொள்ள நேரிடும் என்பதால் இந்த கல்யாண சடங்கை செய்கிறார்கள்.
ஆனால் இந்த திருமணத்தை வழக்கமான கல்யாண விழாவாகவே குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முன்னிலையில் நடத்துகின்றனர். இதில் குழந்தைகளுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு மட்டும் அனுமதி கிடையாதாம்.
முழுக்க முழுக்க பெரியவர்களால் மட்டுமே நடத்தி முடிக்கப்படுகின்றன. வழக்கமான இந்திய கலாசாரப்படி திருமணத்துக்கான நிச்சயதார்த்தம் செய்வது, அதன் பிறகான சடங்குகள் முடித்து மணமக்களை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து வருவதும், கறி விருந்து வைப்பது போன்ற அனைத்தும் அதில் இடம்பெற்றிருக்கும்.
தற்போது இந்த வித்யாசமான திருமண முறை குறித்த வீடியோக்களை கர்நாடகாவைச் சேர்ந்த Anny Arun என்ற யூடியூபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் அதிசயித்து போயிருக்கிறார்கள்.