”இரு இரு நான் இறங்குற அதே மாதிரி பண்ணு” -குட்டிக்கு பாடமெடுத்த தாய் யானையின் க்யூட் க்ளிப்
வன விலங்குகளில் யானைகள் பார்ப்பதற்கு பெரிதாக இருந்தாலும், மனதளவில் அவைகள் கனிவான மற்றும் குழந்தைதனம் கொண்ட உயிரினம்தான் என அவற்றின் சுட்டித்தனமான செயல்கள் கொண்ட வீடியோக்களை காணும்போதே தெரிந்துகொள்ள முடியும். அதேவேளையில், பாசத்தை பொழிவதிலும் யானைகள் கெட்டிதான்.
அந்த வகையில், தாய் யானை ஒன்று தனது குட்டிக்கு மண் சரிவில் இருந்து எப்படி கீழே இறங்குவது என கற்றுத் தரும் வீடியோ now this news-ன் இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டிருப்பது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அம்மா என்ற நிலைக்கு வந்துவிட்டாலே தனது குழந்தைகளை பாசத்தோடு வளர்ப்பதோடு, அவற்றுக்கு நல்லவைகளை கற்றுத் தருவதிலும், கஷ்ட காலத்தில் உறுதுணையாக இருப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. அந்த தாய்ப்பாசம் மனிதர்களிடையே மட்டுமல்லாமல் எல்லா உயிரினங்களிடமும் இருப்பது இயற்கையே.
அப்படிதான் இந்த யானையும் தனது குட்டிக்கு மண் சரிவில் கீழே இறங்கச் சொல்லி கொடுத்திருக்கிறது. அதன்படி, மண் சரிவு நிறைந்த வழுக்கும் மலையிலிருந்து எந்த பாதையில் செல்வது என்று குட்டி யானை குழப்பமடைந்தது. அப்போது, உடன் இருந்த தாய் யானை தனது குட்டி எப்படி சரிவில் இறங்குவது என செய்துக் காட்டியது.
தாயின் செயலை பார்த்த அந்த குட்டி அழகாக மண் சரிவில் இறங்கி கீழே செல்கிறது. இந்த சம்பவம் தெற்கு தாய்லாந்தின் நாராதிவாட் மாகாணத்தில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தில் நடந்திருக்கிறது.
இது குறித்த now this news இன்ஸ்டா போஸ்ட்டின் கேப்ஷனில், “அம்மாக்கள் எப்போதும் சிறந்தவர்கள். அவர்களின் பங்கு அளப்பறியது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இது குறித்து பேசியுள்ள வனவிலங்கு ஊழியர் வுட்டிச்சை பூன்சாங், “இதுப்போன்ற உயிரினங்களை பாதுகாக்கும் பணியில் இருப்பதே பெருமையாக இருக்கிறது” என மகிழ்ச்சி பொங்க கூறியிருக்கிறார். இந்த வீடியோவை இதுவரையில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள்.