போட்டிகளைக் குறைத்து ஐபிஎல் தொடரை நடத்தத் திட்டமா?
போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து ஐபிஎல் தொடரை நடத்தலாமா என்பது குறித்து கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடர்பாக மும்பையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி, பொதுச் செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, திட்டமிடப்பட்ட போட்டிகளை விட குறைந்த எண்ணிக்கையிலான ஆட்டங்களைக் கொண்டு நடப்பாண்டு ஐபிஎல் தொடரை நடத்தலாமா? என ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இல்லாத நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கொரோனா தாக்கம் எதிரொலியாக ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. மேலும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரும் ரத்து செய்யப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியன் ஓபன் உள்ளிட்ட பேட்மிண்டன் போட்டித் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளைமறுதினம் முதல் ஏப்ரல் 12ம் தேதி வரையிலான தொடர்கள் கைவிடப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதனால், சுவிஸ் ஓபன், இந்தியன் ஓபன், சிங்கப்பூர் ஓபன் உள்ளிட்ட தொடர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.