கட்சியின் நெருக்கடிகளைத் தீர்த்த அகமது பட்டேலுக்கு நெருக்கடி.....
குஜராத் மாநிலங்களவைத் தேர்தல், தேசிய அளவில் விவாதிக்கப்படும் அளவிற்கு முக்கியத்துவம் பெறக் காரணம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அகமது படேல்.
தற்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியில் சோனியா, ராகுலுக்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிக்க மனிதராக அறியப்படுபவர் அகமது படேல். குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு நான்கு முறையும், மக்களவைக்கு மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அகமது படேல்.
1976-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தொடங்கி, மத்திய, மாநில அரசியலில் படிப்படியாக வளர்ச்சியடைந்தவர். நெருக்கடி நிலைக்கு அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தோல்வி அடைந்த போதும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அகமது படேல்.
1985-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்கள் வட்டாரத்திற்குள் நுழைந்த அகமது படேல், அதன் பிறகு தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நகர்வுகளை தீர்மானிக்கும் முக்கிய இடத்தைப் பிடித்தார். தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அந்தஸ்தைப் பெற்றுள்ள அகமது படேல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் கட்சிக்கும், ஆட்சிக்கும் பாலமாக செயல்பட்டவர். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் எல்லாம் அதனை தீர்க்கும் பொறுப்பினை ஏற்று திறம்பட செயல்பட்டவர் அகமது படேல். தற்போது மாநிலங்களவைத் தேர்தல் அவருக்கே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.