ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை: இன்று மாலை முக்கிய முடிவு - ஓபிஎஸ்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளது பற்றி இன்று மாலை முக்கிய முடிவு எடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க சென்னை வருமாறு, ஆதரவு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், அணிகள் இணைப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், இன்று மாலை தங்களது முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவரது மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். அவர்கள் விசாரணை நடத்தி விபரங்களை அரசிடம் சமர்ப்பிப்பார்கள். அதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் அணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதனிடையே, துணைப்பொதுச்செயலாளர் தினகரனை நியமித்தது செல்லாது என்று முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.