கொரோனா பரிசோதனை செய்துவிட்டு உறவினர் வீட்டில் தங்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு
வேதாரண்யத்தில் கொரோனா பரிசோதனை செய்துவிட்டு தனிமைப்படுத்தும் மையத்தில் தங்காமல் உறவினர் வீட்டில் தங்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். சில மாவட்ட எல்லைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பல இடங்களில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு சென்னையில் இருந்து வருபவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்த பின்னரே அவர்கள் ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் சிலர் இந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி ஊருக்குள் வந்துவிடுவதாக கூறப்படுகிறது. சிலர் கொரோனா பரிசோதனை செய்துவிட்டு தனிமைப்படுத்தும் மையத்தில் தங்காமல் சென்றுவிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கடினல்வயலைச் சேர்ந்த 4 பேர் கொரோனா பரிசோதனை செய்துவிட்டு தனிமைப்படுத்தும் மையத்தில் தங்காமல் உறவினர் வீட்டில் தங்கியதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வந்த நான்கு பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். பின்னர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்காமல், தென்னம்புலம் என்ற கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, வெளியூர்களிலிருந்து அரசின் அனுமதி இன்றி வரும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.