கடத்தல் தங்கத்தில் செம்பு: மூன்று பேருக்கு அடி உதை !

கடத்தல் தங்கத்தில் செம்பு: மூன்று பேருக்கு அடி உதை !
கடத்தல் தங்கத்தில் செம்பு: மூன்று பேருக்கு அடி உதை !

இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கக்கட்டியில் செப்பு கலந்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை கடத்திச் சென்று தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


இலங்கையில் இருந்து கடத்தி வரப்படும் தூய தங்கத்திற்கு தமிழகத்தில் அதிக விலை என்பதால் இதை கடத்தி வரும் கும்பல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் கடலோர மாவட்டமான ராமநாதபுரம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இம்மாவட்டத்தை சேர்ந்த கடத்தல் கும்பல், மருந்து மற்றும் போதை பொருட்கள், கடல் அட்டைகள், பீடி இலைகளை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துகின்றனர்.


இவற்றிற்கு மாற்றாக இலங்கையில் இருந்து தூய தங்கக்கட்டிகளை கடத்தி வந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள நகை கடைகளில் அதிக விலைக்கு விற்று சொகுசு வாழ்வில் திளைத்து வருகின்றனர். கடத்தல் விவகாரம் தொடர்பாக கடந்த 7 மாதங்களுக்கு முன் ஏர்வாடியைச் சேர்ந்த ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டார்.


இந்நிலையில், கடந்த செப்டம்பர் 24-ல் இலங்கையைச் சேர்ந்த தினேஷ் என்பவர் மூலம் கடல் வழியாக கோட்டைபட்டிணம் ரகுமான்கான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 6 கிலோ தங்கக் கட்டிகளை தமிழகத்திற்கு கடத்தி வந்தார். இதனை செப்டம்பர் 25ஆம் தேதி கோட்டை பட்டிணம் சிவக்குமாரிடம், கொடுத்துச் சென்றார். இந்த தங்கக்கட்டிகளில் செம்பு கலந்திருக்கிறது இது குறித்து விசாரிக்க ரகுமான் கானிடம் சிவக்குமார் தகவல் தெரிவித்தார்.


இதன்படி ரகுமான்கான், இவரது கூட்டாளிகளான கோட்டைபட்டிணம் ராவுத்தர் கனி, கோபால்பட்டிணம் அயூப்கான் ஆகியோர் செப்.25 இரவு ராமநாதபுரம் வந்தனர். இவர்களை இலங்கை நபர் தினேஷின் ஆலோசனைபடி தேவிபட்டிணம் அருகே இலந்தை கூட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து கடத்தி வந்த தங்கக்கட்டிகள் குறித்து விசாரித்தனர்.


தினேஷிடமிருந்து பெற்று வந்த தங்கக்கட்டிகளை கொடுத்து விட்டதாக உறுதியாக கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த முஹமது அசாருதீன், இஸ்மாயில் சபீர், யாசீன், ஆவுடையார்கோவில் மருதுபாண்டி ஆகியோர் ரகுமான்கான், ராவுத்தர்கனி, அயூப்கான் ஆகியோரை சித்ரவதை செய்து தாக்கினர். தினேஷ் அறிவுறுத்தல் படி சிவக்குமாரை, ஆவுடையார்கோவில் மருதுபாண்டி வீட்டில் அடைத்து வைத்தார்.


போலீசாருக்கு கிடைத்த தகவல்படி தேவிபட்டிணம் போலீசார் காயமடைந்த ரகுமான்கான், ராவுத்தர்கனி, அயூப்கான் ஆகியோரை மீட்டு. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரகுமான் கான் புகாரில் கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளின் கீழ் தேவிபட்டிணம் போலீசார் வழக்கு பதிந்து முஹமது அசாருதீன் ,இஸ்மாயில், சபீர், யாசீன், ஆவுடையார்கோவில் மருதுபாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com