காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.
மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தாயாரிக்கும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டே தொடங்கியது. பொதுமக்களிடமிருந்து கருத்துகளை கேட்கும் முறையை முதன்முறையாக அறிமுகப்படுத்திய காங்கிரஸ் கட்சி இதற்காக பிரத்யேக வலைதளத்தையும் தொடங்கியது. இதுதவிர தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து, கருத்துகளை கேட்டறிந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். பொருளாதாரம், விவசாயம், கல்வி, தொழில் உள்ளிட்ட 20 தலைப்புகளில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே அறிவித்த, குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய் குறித்து விரிவான விளக்கம் இடம்பெறும் எனத் தெரிகிறது.
முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் லட்சக்கணக்கான கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், நிதி ஆயோக் கலைக்கப்படும் என்றும் அதற்கு பதிலாக புதிய திட்டக்குழு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.