கோவாவில் ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோரியது காங்கிரஸ்

கோவாவில் ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோரியது காங்கிரஸ்
கோவாவில் ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோரியது காங்கிரஸ்

கோவாவில் நடைபெறும் பாஜக அரசை கலைத்துவிட்டு தனிப்பெரும்பான்மையுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று கோவா ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. 

மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை. ஆனால், 13 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. மஹாராஷ்ட்ரவாடி கோமண்டக் கட்சி, கோவா முன்னோக்கு கட்சி, சுயேட்சை ஆகியவற்றின் தலா மூன்று எம்.எல்.ஏக்கள் பாஜவுக்கு ஆதரவு அளித்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு எம்.எல்.ஏ ஆதரவுடன் கோவா சட்டசபையில் பாஜகவின் பலம் 23 ஆக இருந்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸின் பலம் 17.

தாங்கள் தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்குமாறு ஆளுநர் மிரிதுலா சின்ஹாவிடம் கோவா காங்கிரஸ் கட்சி கடந்த செப்டம்பர் மாதம் வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏக்கள் 16 பேரின் கையெழுத்து அடங்கிய உரிமை கோரும் கடிதத்தை ஆளுநர் மாளிகையில் அளித்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்புவிடுக்கவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சுபாஷ் ஷிரோத்கர் மற்றும் தயானந்த் சோப்தே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். அதேபோல், கோவா துணை சபாநாயகர் பிரான்சிஸ் சவுஸா உயிரிழந்தார். இதனால், கோவா சட்டசபையின் பலம் 37 ஆக குறைந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்கள் உள்ளன. பாஜகவிடம் 13 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் தங்கள் வசம் இருந்த மூன்று எம்.எல்.ஏக்களை இதுவரை இழந்துள்ளது. 

பிரான்சிஸ் சவுஸா மறைவை அடுத்து காங்கிரஸ் கட்சி கோவாவில் ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோரியுள்ளது. இதுதொடர்பாக மைனாரிட்டி பாஜக அரசினை கலைத்துவிட்டு, தனிப்பெரும் கட்சியான காங்கிரஸை ஆட்சி அமைக்க கோரி ஆளுநர் மிரிதுலா சின்ஹாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் கேவ்லெகர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கோவாவில் ஜனநாயகத்திற்கு விரோதமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முயற்சிக்க கூடாது என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி இருந்தது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com