பணமதிப்பிழப்பு தினத்தை பாஜக திசை திருப்புகிறது: காங்கிரஸ் விமர்சனம்
நவம்பர் 8 ஆம் தேதியை கருப்புப் பண எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்க பாஜக முடிவு செய்திருப்பது அரசின் தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்ட நவம்பர் 8 ஆம் தேதியை, கருப்பு பண ஒழிப்பு தினமாக கடைபிடிக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா, நவம்பர் 8 ஆம் தேதியை மக்கள் விரோத ‘பாரதிய ஜனதா கொள்கைகள்’ தினமாக என கடைபிடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என விமர்சித்தார். அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தொடங்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை, பிரதமர் அழித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். எனவே நவம்பர் 8 ஆம் தேதியை கருப்புப் பண ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்க பாஜக முடிவு செய்திருப்பது, மத்திய அரசின் தோல்வியில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று சாடினார்.
அப்போது பேசிய மற்றொரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான சுர்ஜிவாலா, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிக வளர்ச்சிக் கண்டதாக கூறினார். மேலும் கங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2013-14 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் பாஜக ஆட்சியில் கடந்த 2016-17 ஆம் ஆண்டில் வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம்தான் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.