தமிழகத்திற்கு எதிராக ராகுல் வாட்ஸ் அப் பேச்சு: திருநாவுக்கரசர் விளக்கம்
தமிழகத்திற்கு எதிராக ராகுல் பேசியதாக கூறுவது தவறான செய்தி என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உச்சநீதிமன்றம் தீர்ப்பை மத்திய அரசு மதித்து ஆணையிட்ட பிறகு கர்நாடக அரசு மதிக்கவில்லை என்றால் நானே போய் கர்நாடக முதல்வர் சீத்தாராமையாவிடம் முறையிடுவேன். காவிரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கர்நாடக முதல்வரிடம் பேசவில்லை என்று குறைக்கூறுவது பிரச்னையை திசைத் திருப்பக்கூடியது.
நர்மதா நதி தொடர்பாக மத்திய பிரதேசம், குஜராத்திற்கும் இடையேயான பிரச்னையை உச்சநீதிமன்றம்தான் தீர்த்து வைத்தது. இரு மாநிலங்களில் பாஜக அரசு இருந்தும், அமித் ஷா தீர்க்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பையும், அரசியல் சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் மத்திய அரசு மதிக்காமல், அவமதித்துள்ளது. மத்திய அரசு இப்படி நடந்தால், மற்ற அமைப்புகள் நீதிமன்ற தீர்ப்பை எவ்வாறு மதிக்கும். கர்நாடகாவிற்கு ஆதரவாகவோ, தமிழகத்திற்கு எதிராகவோ ராகுல் காந்தி எதுவும் பேசவில்லை. வாட்ஸ் அப்பில் தவறாக பரப்பப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.