கூட்டணி அமைப்பதில் தோற்கும் காங்கிரஸ்.. உஷாராகுமா? !

கூட்டணி அமைப்பதில் தோற்கும் காங்கிரஸ்.. உஷாராகுமா? !

கூட்டணி அமைப்பதில் தோற்கும் காங்கிரஸ்.. உஷாராகுமா? !
Published on

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில் பல கட்சிகள் அதனை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தேசிய அளவில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகள் என்றால் அது பாஜக மற்றும் காங்கிரஸ்.  பெரும்பாலும் தேர்தல் இவர்கள் இருவரை சுற்றியே இருக்கும். ஏனெனில் பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ள அல்லது அதிக இடங்களை கைப்பற்றும் வலிமை கொண்ட கட்சிகள். இந்நிலையில் எப்படியாவது மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த இரண்டு கட்சிகளிடமும் உள்ளது. ஆனால் இதற்கான தயாரிப்பு மற்றும் முயற்சியில் காங்கிரசை விட பாஜக முன்னிலையில் உள்ளதாக தெரிகிறது. 

நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் மாநிலமாக பார்க்கப்படுவது உத்தரப்பிரதேசம். 80 இடங்கள் அதன் பலம். அதனால் தேசிய கட்சிகள் அதிக கவனம் செலுத்தும் மாநிலமாக உள்ளது. இங்குள்ள பெரிய மாநில கட்சிகளான பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் பாஜகவை விட காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப் போகும் கட்சிகள். இந்த 2 கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரியங்கா காந்தியை பொதுச்செயலாளர் ஆக்கிவிட்டு கூட்டணியில் கோட்டை விட்டது காங்கிரஸ். கூட்டணி சேர்க்கும் முயற்சியில் அகிலேஷ் யாதவுக்கு இருந்த ஆர்வம் கூட காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. ரஃபேலை முன்னிறுத்துவதிலும் , அதில் ஆய்வு செய்வதிலும் காங்கிரஸ் அதிகம் மூழ்கியிருந்தது. 

மகராஷ்டிராவில் பெரிய கட்சிகளுள் ஒன்றான  தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்திருக்கிறது காங்கிரஸ். ஆனால் பாஜகவுடன் பல ஆண்டுகளாகவே சிவசேனா கசப்புணர்வில் இருந்தது. இதனை காங்கிரஸ் பயன்படுத்தும் எனப் பலரும் எண்ணிய சூழலில், அந்த வாய்ப்பையும் காங்கிரஸ் நழுவ விட்டது. சிவ சேனாவை , பாஜகவுடன் சேர விடாமல் கூட தடுத்திருக்கலாம். ஆனால் அந்த அளவுக்கு கூட காங்கிரஸ் முயலவில்லை. கர்நாடகாவில் கூட பல்வேறு நெருக்கடிகளுக்கு பிறகு கூட்டணிக்கான இடங்களை இறுதி செய்திருக்கிறது. ஆனாலும் மஜத மற்றும் காங்கிரஸ் இடையே உரசல்கள் இல்லாமல் இல்லை. 

மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியை அமைத்திருக்கிறதா என்றால், பெரும்பாலும் இல்லை என்பதே பதில். டெல்லியில் கூட்டணிக்கு தயார் என அரவிந்த் கெஜிரிவால் அறிவித்தார். வேட்பாளர்களை அறிவித்த நாளில் கூட, காங்கிரஸ் அழைக்கும் எனக் காத்திருந்தார். ஆனால் ஷீலா தீட்சித்தோ , கூட்டணி இல்லை என்று தடாலடி அறிவிப்பு வெளியிட்டார். தனித்து நிற்கும் வலிமை உள்ளதாக கூறினார். ஆனால் கடந்த தேர்தல்களின் புள்ளி விபரங்கள் சொல்வதை காங்கிரஸ் துச்சமாக எண்ணியதோ எனத் தோன்றுகிறது. ஏனெனில் ஆம் ஆத்மி வாங்கிய அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள்.  

இதற்கிடையில், காங்கிரஸ் - லாலு கட்சியிடையே இடங்களை பங்கிடுவதில் நீடிக்கும் இழுபறி காரணமாக , கூட்டணியை விட்டு வெளியேறத் தயார் எனக் கூறும் அளவுக்கே முன்னேற்றம் இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ஏகே ஆண்டனி குழு , 1 வருடமாகியும் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. 

வடகிழக்கு மாநிலங்களிலும் கூட இதே நிலைதான். சட்ட மன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக வலுவாக இருக்கிறது. ஆனால் அங்கும் கூட சமாஜ்வாதி அல்லது பகுஜன் சமாஜை இணைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முயலவில்லை. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்களில் நிலைமை பரிதாபத்தில் உள்ளது. ஆனால் பாஜக இதில் ஒருபடி மேலே உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி தேவைப்படும் மாநிலங்களில் உரிய கூட்டணியை அந்தக் கட்சியை அமைத்தே விட்டது எனக் கூறும் அளவுக்கு உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com