சபாநாயகருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு
தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 16-ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக வரலாறு காணாத பேரழிவை டெல்டா மாவட்ட மக்கள் சந்தித்தனர். தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் ஊடுருவிய கஜா புயல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும், ஏற்படுத்தியது.
கஜா புயலினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் டெல்டா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளும் நிவாரணப் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் சில இடங்களில் நிவாரணப் பொருட்கள் சரிவர வந்து சேரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் ஆய்வு நடத்த மேற்கொள்ள இருக்கும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசிடம் கர்நாடக அரசு ஒப்புதல் வாங்கியுள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவையை விரைந்து கூட்டுமாறு சபாநாயகர் தனபாலிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேகதாது அணை விவகாரம், கஜா புயல் நிவாரணத்துக்கு மத்தியஅரசு வழங்கிய நிதி போதாது என்பதால் அதை விவாதிக்க வேண்டும் என சபாநாயகர் தனபாலிடம் வலியுறுத்தியுள்ளனர்.