எம்.எல்.ஏ.களை ரூ.15 கோடிக்கு விலை பேசுகிறது பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தலா 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்கான குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 44 எம்எல்ஏக்கள் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர்.
குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்திக்கு நெருக்கமானவரக கருதப்படும் அகமது படேலும் போட்டியிடுகின்றனர். இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் ஐக்கியமாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸின் பலம் 51 ஆக குறைந்திருப்பதால் மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் கட்சி மாறுவதைத் தடுக்கும் வகையில் காங்கிரஸின் 44 எம்எல்ஏக்கள் பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் 22 எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 15 கோடி ரூபாய் என்ற ஆசை வார்த்தையை பாஜக கூறியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில் தெரிவித்தார். குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்காக குதிரை பேரம் நடைபெறுவதாகக் கூறி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.