சாதி அமைப்புகளை நம்பியிருக்கிறது காங்கிரஸ்: விஜய் ரூபானி குற்றச்சாட்டு
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் கட்சி சாதி அமைப்புகளின் தலைவர்களை நம்பியிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி குற்றம்சாட்டியுள்ளார்.
அகமதாபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசும்போது, படேல் இனத் தலைவர் ஹர்திக் படேலுடன் காங்கிரஸ் கைகோர்த்திருப்பதால் பாஜகவின் வெற்றி பாதிக்கப்படாது. இடஒதுக்கீடு விவகாரத்தை பயன்படுத்தி குஜராத் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. பிரதமர் மோடியின் செல்வாக்கைப் பார்த்து பயந்தே, சாதித் தலைவர்களை காங்கிரஸ் நம்பியிருக்கிறது.
காங்கிரஸ் ஒருவேளை குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால், பட்டிடார் சமூக மக்களுக்கு எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் என்று இதுவரை ஒரு வார்த்தை கூட கூறாத நிலையில் ஹர்திக் படேல் காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளார். காங்கிரஸ் கூறும் 50 சதவீத இட ஒதுக்கீடு என்பது மக்களை ஏமாற்றும் செயலே தவிற, அவர்களிடம் இதற்கான சூத்திரம் எதுவும் இல்லை. குஜராத்தில் பாஜகவை குற்றம்சாட்ட எந்த முகாந்திரமும் இல்லாததால், ஜாதித் தலைவர்களான ஹர்திக் படேல், அல்பேஸ் தாகோர், ஜிக்னேஷ் மேவானி, சோட்டா வசவா உள்ளிட்டவர்களை எங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது என்று ரூபானி குற்றம்சாட்டியுள்ளார்.