“புதிய நோட்டுகள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டன?” - பணமதிப்பிழப்பு ஊழல் குறித்து காங். புகார்

“புதிய நோட்டுகள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டன?” - பணமதிப்பிழப்பு ஊழல் குறித்து காங். புகார்

“புதிய நோட்டுகள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டன?” - பணமதிப்பிழப்பு ஊழல் குறித்து காங். புகார்
Published on

மோடி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இந்த அறிவிப்பை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இரவு அறிவித்தார். இதனால் மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை மாற்ற வங்கியில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அத்துடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரமும் அதிகளவில் பாதிக்கப்பட்டது போகப் போக தெரியவந்தது. 

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஊழல் நடைபெற்றதற்கான வீடியோ ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி இப்போது வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை முறைகேடாக மாற்றுவது தொடர்பான வீடியோவை வெளியிட்டார். 

மேலும் அவர், “பாஜக  ஆட்சியில் நடைபெற்ற முக்கியமான ஊழல் பணமதிப்பிழப்புதான். ஏனென்றால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் பாஜக முறைகேடாக பணத்தை மாற்றியுள்ளது. அத்துடன் பணத்தை மாற்றுவதற்கு 15% முதல் 40% வரை லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. இந்தச் செயலுக்கு ரா அமைப்பின் ஊழியர் ஒருவரும் ‘இண்டஸ் இந்த் வங்கி’யின் ஊழியரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த வீடியோவில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் மகாராஷ்டிராவிலுள்ள அரசு குடோனில் மாற்றப்படுவதற்காக காட்சி பதிவாகியுள்ளதை நீங்கள் காணலாம்.  மேலும் இந்த வீடியோவில் பாஜக தலைவர் அமித் ஷாவின் பெயர் இரண்டு முறை குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இந்தச் சம்பவத்தில் பல அரசு அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. தேர்தல் நேரத்தில் தேவையில்லாமல் சோதனை நடத்துவதை விட்டு அமலாக்கதுறை அல்லது சிபிஐ இந்த ஊழல் குறித்து விசாரிக்குமா?” என வினவியுள்ளார்.

மோடி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், புதிய ரூபாய் நோட்டுக்கள் வேகவேகமாக அச்சிடப்பட்டன. ஆனாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்குத் தேவையான புதிய நோட்டுகளை அரசு அச்சிட முடியாமல் தவிப்பதாக செய்திகள் வெளியாகின. குறிப்பிட்ட காலவரம்புக்குள் புதிய நோட்டுகளை அச்சிடும் வசதி இந்தியாவில் இல்லை என்றும் கூறப்பட்டது.  இந்நிலையிதான் இப்போது வெளியான வீடியோ பதிவின் மூலம் நாட்டுக்குத் தேவையான புதிய ரூபாய் நோட்டுகள் வெளிநாடுகளில் அச்சிடப்பட்டு, ‘ஹின்டன் ஏர் ஃபோர்ஸ் பேஸ்’ வழியாக டெல்லிக்கு கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த வாதத்தை காங்கிரஸ் தரப்பு முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இதற்குப் பதிலளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வழக்கமாகிவிட்டது. இது அரசியல் காரணங்களுக்காக எங்கள் ஆட்சியின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “கபில் சிபல் எங்கள் கட்சி தலைவர் அமித் ஷாவின் மீது தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தொடர்பாக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com