பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ், பாரதிய ஜனதா வெற்றி - தோல்விகள் என்ன?
இதுவரை நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா பெற்ற இடங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
1951, 1952ம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 364 இடங்களை பெற்றது. அடுத்து 1957ல் இது 371 ஆக அதிகரித்து 1962ல் 361 ஆக குறைந்தது. 1967ல் காங்கிரஸ் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 283 என்ற அளவிற்கு சரிந்தது. ஆனால் 1971ல் இந்த எண்ணிக்கை 352 ஆக அதிகரித்தது.
1977ல் அவசர நிலையை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் 154 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் கட்சி முதன் முறையாக அரியணையில் இருந்து இறங்கியது. எனினும் எதிர்க்கட்சிகள் பிரிந்ததால் 1980ல் காங்கிரஸ் 351 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது. 1984ல் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 414 இடங்களில் வென்றது. ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். மக்களவைத் தேர்தல் வரலாற்றில் ஒரு கட்சி வென்ற அதிகபட்ச தொகுதிகள் இதுவே ஆகும்.
எனினும் 1989 தேர்தலில் காங்கிரஸ் 197 இடங்களில் வென்றாலும் ஆட்சியமைக்க முடியவில்லை. பாரதிய ஜனதா ஆதரவுடன் வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு ஆட்சியமைத்தது. நாட்டில் கூட்டணி ஆட்சி முறைக்கு வழிவகுத்த முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து 1991ல் ராஜிவ் காந்தி மரணத்திற்கு இடையே நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 232 இடங்களில் வென்று நரசிம்மராவ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தது. எனினும் 1996ல் 140, 1998ல் 141, 1999ல் 114 என அடுத்தடுத்த தேர்தல்களில் குறைவான இடங்களையே வென்று காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருந்தது.
2004ல் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் 145 இடங்களை வென்று கூட்டணி ஆட்சி அமைத்தது. மன்மோகன் சிங் பிரதமர் ஆனார். 2009ம் ஆண்டும் 206 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியை தொடர்ந்தது. எனினும் 2014ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 44 இடங்களையே வென்று ஆட்சியை பாரதிய ஜனதாவிடம் இழந்தது.
பாரதிய ஜனதா கட்சியை பொருத்தவரை 1984 தேர்தலில் 2 இடங்களில் வென்றது. இதன் பின் 1989ல் 85, 1991ல் 120 என வேகமாக வளர்ந்த அக்கட்சி 1996ல் 161 இடங்களில் வென்று பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு ஏற்றம் கண்டது. 1998ம் ஆண்டும் 1999ம் ஆண்டும் நடைபெற்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா 182 தொகுதிகளை வென்று வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது.
எனினும் 2004ம் ஆண்டு 138 இடங்களில் மட்டுமே வென்று காங்கிரசிடம் ஆட்சியை பாரதிய ஜனதா இழந்தது. 2009ம் ஆண்டும் பாரதிய ஜனதா 116 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி வரிசையில் தொடர்ந்தது. ஆனால் 2014ம் ஆண்டு பாரதிய ஜனதா 282 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆளும் கட்சியானது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் கூட்டணிகளின் ஆதரவில்லாமல் தனிக்கட்சியின் ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.