உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என முடிவு: மு.க. ஸ்டாலின் விமர்சனம்
உள்ளாட்சி தேர்தலை அதிமுக ஆட்சி முடியும் வரை நடத்தக்கூடாது என்ற முடிவிலேயே, நீதிமன்ற வழக்குகளில் தமிழக அரசு வாதிடுவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர், பெரம்பூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார், மேலும் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், அதிமுக ஆட்சி முடியும் வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்ற முடிவிலேயே நீதிமன்ற வழக்குகளில் தமிழக அரசு வாதிடுவதாக குற்றம் சாட்டினார். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தது என்று ஸ்டாலின் கூறினார். அதே போல் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுகவை கொச்சைப்படுத்தும் வகையில் கார்ட்டூனிஸ்ட் பாலா பலமுறை கேலி சித்திரங்களை வரைந்திருந்தாலும், நாங்கள் அதை ஜனநாயக முறையில் மட்டுமே எதிர்த்து உள்ளோம் என்றும் பாலாவை கைது செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.