மதுரையை தொடர்ந்து தேனியிலும் முழு பொதுமுடக்கம் உத்தரவு
தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுளம் ஆகிய நகராட்சி பகுதிகள் மற்றும் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் முழு பொதுமுடக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது. இதேபோன்று மேலும் ஒரு சில மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுளம் ஆகிய நகராட்சி பகுதிகள் மற்றும் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் முழு பொதுமுடக்கத்தை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பிறப்பித்துள்ளார். இதனால் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் பகுதிகளில் டீ கடைகள், பேக்கரிகள், நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள், பெட்டிக்கடைகள், பர்னிச்சர் கடைகள் இயங்க அனுமதி இல்லை.
அத்துடன் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் இயங்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். இந்த பொதுமுடக்கம் நாளை மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்றும், மறு உத்தரவு வரும் பொதுமுடக்கம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.