பணமதிப்பிழப்பால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர்: டி.ராஜா குற்றச்சாட்டு
பணமதிப்பிழப்பால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த தினத்தை கறுப்புப் பண ஒழிப்பு தினமாக பாஜக கொண்டாடியது. ஆனால் இந்த தினத்தை கறுப்பு தினமாக அனுசரித்து, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து இன்று டெல்லியில் இடதுசாரி கட்சிகளின் பேரணி நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தாகாரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் உள்ள மண்டி ஹவுஸ் முதல் ரிசர்வ் வங்கி அலுவலகம் வரை இப்பேரணி நடைபெற்றது. அப்போது பேசிய டி.ராஜா, பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் இந்திய பொருளாதாரம் ஆழமான நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டதாக சாடினார். அத்துடன் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்றும், சிறு-குறு தொழில் நாசமடைந்துவிட்டதாகவும், சிறு வியாபாரிகள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினர்.