கொரோனா பீதி - உயிரிழந்த சாமியார் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு
கோவை அருகே உயிரிழந்த சாமியாரின் உடலை தங்கள் ஊரில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் நரசீபுரம் அருகே ஆத்தூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் காட்டுப்பகுதியில் விஸ்வாமித்திரர் ஆலயம் என்னும் அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இதனிடையே நேற்று இரவு ஒரு காரில், இறந்தவர் சடலத்தை அந்த கோயிலுக்கு கொண்டு செல்வதை அப்பகுதியில் ஒருவர் பார்த்து ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும் அப்பகுதியில் இறந்தவர் உடலை அந்த கோயில் வளாகத்தில் குழி தோண்டி புதைக்க ஏற்பாடுகள் அவசர அவசரமாக நடந்து வருவதும் பின்னர் தெரியவந்தது.
இதை அறிந்த பொதுமக்கள் கொரானா நேரத்தில் வெளியூரில் இறந்தவர் உடலை அனுமதியின்றி அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்டனர்.
தகவலறிந்த ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவை காந்திபுரம் கிராஸ்கட் 3- வது வீதியில் வசித்து வந்த ஆண்டுரூ என்ற சாமியார் சர்க்கரை நோயால் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் அவருடன் இருந்த சீடர்கள் மற்றும் பக்தர்கள் அவர் கூறிய இடத்தில் அவரை அடக்கம் செய்ய கொண்டுவந்ததாக கூறியுள்ளனர்.
இதனிடையே கொரோனா நோய் தொற்று காராணமாக காந்திபுரம் மூன்றாவது மற்றும் நான்காவது வீதிகள் உள்பட பல வீதிகள், தடைசெய்யபட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இறந்தவர் உடலை கொரானா பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யக்கூடாது எனக்கூறி, உடல் காரில் திருப்பி அனுப்பப்பட்டது.

