ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? முதலமைச்சர் கேள்வி
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம் என கூறினால் திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், முட்டை விலை உயர்வு காரணமாக பள்ளி சத்துணவில் முட்டை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று கூறினார். அத்துடன் அதிமுக அரசு ஏழை எளிய மக்களுக்காக செயல்படுவது என்றும், அது ஒருபோதும் சத்துணவு முட்டைகளை நிறுத்தாது என்றும் தெரிவித்தார்.
அதே வேளையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கான சில திட்டங்களையும் முதலமைச்சர் அறிவித்தார். வல்லநாடு அருகே அகரத்தில் தடுப்பணை கட்டப்படும் என்றும், மணப்பாடு கடற்கரை பகுதி சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் எனவும் கூறினார். அத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரலை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மீளவிட்டான் முதல் மணியாச்சி வரை புதிதாக சாலை அமைக்கப்படும் என்றும், தூத்துக்குடி மாநகராட்சியில் விரிவாக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும் மறைந்த டாக்டர். சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

