மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்துவிட்டார் தினகரன்: எடப்பாடி பழனிசாமி
மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றுவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆர்கே.நகர் தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி ஏற்படவில்லை என தெரிவித்தார். மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து டிடிவி தினகரன் பெற்றுள்ள வெற்றி உண்மையான வெற்றியல்ல எனவும் பழனிசாமி குறிப்பிட்டார். டிடிவியும், ஸ்டாலினும் கூட்டு சேர்ந்து இரட்டை இலையை தோற்கடிக்க நினைத்துள்ளதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுகவுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆட்சி அதிகாரத்தை வைத்து இடைத்தேர்தலை அதிமுக சந்திக்கவில்லை எனவும் பழனிசாமி குறிப்பிட்டார்.

