கொடி நாள் நிதி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
ராணுவ வீரர்கள் நலனுக்காக கொடி நாள் நிதியை சென்னை ஆட்சியரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் 7 ஆம் நாளை இந்திய அரசும், இந்திய மாநில அரசுகளும் கொடி நாளாக கடைப்பிடிக்கின்றன. தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் பொருட்டு கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதி படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தப்படும். மேலும் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் இந்தப் பணம் பயன்படுகிறது.
இந்நிலையில் கொடி நாளையொட்டி, சென்னை ஆட்சியரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி வழங்கினார். இதனிடையே கொடி நாள் நிதிக்காக அதிக நன்கொடை வழங்குமாறு பொதுமக்களை முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.