நிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு
புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சித்திட்டங்களுக்காக அமைக்கப்பட்ட சி.எஸ்.ஆர் குழுவின் நிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ஆளுநர் மாளிகை அலுவலகம் முறைகேடான வகையில் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சி.எஸ்.ஆர் திட்டத்தின் நிதியை பெற்று முறைகேடாக செலவு செய்வதாகவும், இந்த நிதியை பெற ஆளுநர் மாளிகைக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பிய நாராயணசாமி, இதுவரை ரூ.85 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தெரிகின்றது. சி.எஸ்.ஆர் கமிட்டிதான் இந்த நிதியை வசூலிக்க வேண்டும் ஆகவே இந்த இது குறித்து சி.எஸ்,ஆர் கமிட்டியிடம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் இந்த ஊழல் விவகாரத்தில் ஆளுநர் மாளிகையில் உள்ள அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பதாகவும், எல்லாம் வெளிப்படைத்தன்மை என்று பேசிவரும் ஆளுநர் கிரண்பேடி இதற்கு பொருப்பேற்க வேண்டும் என்றும் இதற்கு உரிய விளக்கத்தை ஆளுநர் கிரண்பேடி கூற வேண்டும் என நாராயாணசாமி தெரிவித்தார். இதனிடையே மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல் டீசல் விலை ரூ.100 தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. ரபேல் போர் விமான ஊழல் குறித்து பிரதமர் எந்தவித பதிலும் கூறாமல் மெளனம் காத்து வருகின்றார். இதன் மூலம் பிரதமருக்கு இதில் தொடர்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி, சமூக பொறுப்புணர்வு நிதி அளிக்க முன்வருவபர்களுக்கு உதவி செய்து வருவதாகக் குறிப்பிட்டார். கொடையாளர்களை நேரடியாக ஒப்பந்ததாரர்களிடம் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், புதுச்சேரி ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எவ்வித பணபரிமாற்றமும் செய்யப்படவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார். இதன்மூலம் சி.எஸ்.ஆர் குழு நிதியில் முறைகேடு என்ற முதலமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.