முதல்வர் பழனிசாமி முதல் சீமான் வரை - அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை பேச்சுகள்!
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடங்கி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீப்பொறி தெறிக்க பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் மேற்கொண்ட சில பரப்புரைகள் பேச்சுகளை இனி பார்க்கலாம்.
கிருஷ்ணகிரியில் முதல் பழனிசாமி:
திமுகவினர் மக்களை மறந்ததால், மக்கள் அனைவரும் திமுக கட்சியையே மறந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் அதிமுக வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த நலத்திட்டப்பணிகளும் நடக்கவில்லை என்றும், வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றது அதிமுக ஆட்சியில் தான் என்று கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவர்களது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை என்பதால், அதிமுகவை குறை சொல்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். கிருஷ்ணகிரியை தொடர்ந்து பர்கூரில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
சென்னை அம்பத்தூரில் மு.க.ஸ்டாலின்:
பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வேலைகள் தமிழகத்தில் எடுபடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அம்பத்தூர், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கிரிமினல் ஆட்சி நடப்பதாக குற்றம் சாட்டினார்.
இங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குறைகூறினார். தமிழகத்தில் அதிமுகவில் ஒரு எம்எல்ஏ வெற்ற பெற்றாலும் அவர் பாஜக சட்டமன்ற உறுப்பினராகவே கருத வேண்டும் என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்.
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன்:
தாம் செல்லும் இடமெல்லாம் இப்போது மக்கள் மத்தியில் ஜெயிச்சாச்சு என்ற புதிய குரல் கேட்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட புலியகுளத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு வேட்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
அப்போது பேசிய கமல்ஹாசன், திமுக கட்சி உருவானது எப்படி காலத்தின் கட்டாயமோ, இப்போது திமுக அகற்றப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என கூறினார். தங்களை பொறுத்தவரை தேர்தல் அறிக்கையில் 50 சதவீதத்தை நிறைவேற்றினால் தான் ஜெயித்ததாக அர்த்தம் என்று கூறினார்.
கந்தர்வகோட்டையில் டிடிவி தினகரன்
அமமுக ஆட்சிக்கு வந்ததும் விராலிமலை ரகசியம் வெளியே வரும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் கந்தர்வகோட்டையில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஆட்சியில் அமர விடக்கூடாது என மக்களிடம் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள பணத்தில் பாதியளவு, விராலிமலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், அமமுக ஆட்சிக்கு வந்ததும் அவை மக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மதுரையில் சீமான்:
இலவச அரிசி சாப்பிட்டு தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில் தமிழக மக்களை திராவிட கட்சிகள் வைத்திருப்பது சாதனையா அல்லது வேதனையா என்று எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவை ஆட்சி செய்வது மதம் தானே தவிர, மனிதம் இல்லை என விமர்சித்தார். மாற்றத்துக்கான போர்க்களம் இந்த தேர்தல் என்று கூறிய அவர், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும் என உறுதி அளித்தார்.