தண்டையார்பேட்டையில் திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே மோதல்! ஒருவர் மண்டை உடைப்பு

தண்டையார்பேட்டையில் திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே மோதல்! ஒருவர் மண்டை உடைப்பு
தண்டையார்பேட்டையில் திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே மோதல்! ஒருவர் மண்டை உடைப்பு

தண்டையார்பேட்டையில் திமுகவினர்- அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதில் ஒருவரது மண்டை உடைந்தது. பதற்றமான வாக்குச்சாவடியான அங்கே போலீஸ் பாதுகாப்பு இல்லை என்பது அதிர்ச்சியான ஒன்றாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர். 

ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை இசிஐ மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளிக்கு 10 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. மாலை நேரத்தில் ஓட்டுப்பதிவு மிகவும் மந்தமாகவே காணப்பட்டது.

அப்போது சுயேட்சை வேட்பாளர் போத்தி ராஜன் என்பவர் வாக்குச்சாவடி மையத்திற்குள் நீண்ட நேரமாக சுற்றி கொண்டிருந்ததால் திமுகவைச் சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் பார்த்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வெளியே செல்லும்படி வாக்குவாதம் செய்தனர். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். 

வெளியே வந்ததும் திமுகவைச் சேர்ந்த சிலர் போத்திராஜனுடன் வாக்குவாதம் செய்து விரட்டினர். சிறிது நேரத்திற்கு பிறகு போத்திராஜன் அதிமுகவைச் சேர்ந்த சிலரை அழைத்து வந்து திமுகவைச் சேர்ந்தவர்களை வாக்குவாதத்திலும் மோதலில் ஈடுபட முயன்றதால் பதட்டமான சூழல் உருவானது. 

அந்த வாக்குச்சாவடி மையம் மிகவும் பதற்றமானவை. ஆனால் துணை ராணுவமும் இல்லை, கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் இல்லை. அங்கிருந்த குறைவான பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அதிமுகவைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக கூறினர். 

ஆனால் கலைந்து செல்லாமல் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென திமுகவைச் சேர்ந்த உமாசங்கர் என்பவரை தலையில் தாக்கி விட்டு அதிமுகவைச் சேர்ந்த சிலர் தப்பி ஓடியதால் மேலும் பதட்டம் அதிகரித்தது. 

அப்போது கூடுதல் போலீசார் குவிக்கப்படவில்லை. ஆத்திரமடைந்த திமுகவைச் சேர்ந்தவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்களை விரட்டி பிடித்து தாக்க முயன்றனர். இதனை கண்டு பொதுமக்களும் அலறியடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த பதட்டமான சூழ்நிலையில் காவல்துறையின் உயர்அதிகாரி ஒருவரின் கார் அந்த வழியாக சென்றது. ஆனால் இந்த பிரச்சினை கண்டு கொள்ளாமல் சென்று விட்டார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அனைவரையும் விரட்டியடித்து கலைத்தனர். லேசான தடியடி நடந்தது. மோதல் சம்பவம் தொடர்பாக ஆர்.கே. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் காரணமாக அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com