திமுக - அமமுக கூட்டு வெளிப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி
தங்க தமிழ்செல்வன் மூலம் திமுக - அமமுக கூட்டு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேனியில் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம். 23 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஆட்சியை கலைக்க திமுக எங்களுக்கு உதவ வேண்டும். ஆனால் திமுக ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தர மாட்டோம். அதிமுக ஆட்சியை கலைக்க திமுக ஆதரவு தரவில்லையென்றால் அவர்கள் எங்களை பார்த்து பயந்து விட்டார்கள் என்று அர்த்தம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தங்க தமிழ்செல்வன் மூலம் திமுக - அமமுக கூட்டு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என தெரிவித்தார்.
மே 23 முடிவுக்கு பிறகு ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது எனவும் தோல்வி பயத்தால் தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவதாகவும் குறிப்பிட்டார். 22 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பதால் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வரும் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் 10 தொழிற்சாலைகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட உள்ளது என குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி, புதிய தொழிற்சாலைகள் மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் திறமையின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருவதாகவும் கூறினார்.