ப.சிதம்பரம் விமர்சனம், குஜராத் முதல்வர் பதில்!
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தினை முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம், இமாச்சலப் பிரதேச தேர்தல் தேதியை மட்டுமே அறிவித்தது. அந்த மாநிலத்தில் நவம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. குஜராத் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல் தேதியை பேரணியில் அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சலுகைகள் மற்றும் இலவசங்களை குஜராத் அரசு அறிவித்த பின்னரே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ட்விட்டரில் சாடியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள குஜராத் முதல்வர் விஜய் ருபானி, ’சிதம்பரம் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் குஜராத் தேர்தல் விஷயத்தில் பயம் வந்துவிட்டது’ என்று கூறியுள்ளார்.