ப.சிதம்பரம் தேசவிரோதி, விரைவில் சிறைக்கு செல்வார்: சுப்ரமணியன் சுவாமி காட்டம்

ப.சிதம்பரம் தேசவிரோதி, விரைவில் சிறைக்கு செல்வார்: சுப்ரமணியன் சுவாமி காட்டம்

ப.சிதம்பரம் தேசவிரோதி, விரைவில் சிறைக்கு செல்வார்: சுப்ரமணியன் சுவாமி காட்டம்
Published on

காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும் என்று கூறிய ப.சிதம்பரம் ஒரு தேசவிரோதி என்றும் அவர் விரைவில் சிறைக்கு செல்வார் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தினார். இதுகுறித்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். அதே வேளையில் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின்படி காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்” என்று கூறினார். ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, “ காங்கிரஸ் கட்சி ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது. இது மிகவும் முக்கியமான பிரச்சனை. இதுதான் 1947 முதல் காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கையாக இருந்து வருகிறது. காஷ்மீர் பிரச்சனைக்கும் அதுதான் காரணம். காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்த நாட்டையும் ஏமாற்றுகிறது. பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்கு பதிலாக நாட்டிற்கு பிரச்சனையை உருவாக்க விரும்புகிறது” என்றார். மேலும் சிதம்பரத்தின் கருத்து, கட்சியின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடா என்று காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று அருண்ஜெட்லி கூறினார்.

இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி கூறுகையில், “சிதம்பரம் விரைவில் சிறைக்கு செல்வார். ஒரு தேசவிரோதியை போல் அவர் பேசுகிறார். அவர் சிறைக்கு செல்லும் போது, காஷ்மீரில் இருந்து சிலர் அவருக்காக கண்ணீர் விடுவார்கள்” என்று தெரிவித்தார். ப.சிதம்பரத்தின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com