சென்னை: இந்தி பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரிக்கும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்
ஆவடி சட்டமன்ற தொகுதியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இந்தி மொழியில் துண்டு பிரசுரம் அடித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருவது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற பாண்டியராஜன் தற்போது தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இவருக்கு ஆவடி தொகுதியில் போட்டியிட அதிமுக மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஜெயின் சமூகம் மற்றும் வட இந்தியர்களை கவரும் வகையில் இந்தி மொழியில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக ஆவடியில் உள்ள ஜெயின் பவனில் ராஜஸ்தான் அசோசியேஷன் நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது இந்தி மொழியில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தை வழங்கியுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போதிலும் ஓட்டுக்காக இந்தி மொழியில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.